தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள கீழக்கல்லாம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டானி மகன் இசக்கிமுத்து (55). விவசாயியான இவர், கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி தனது குடும்பத்தினரிடம் கடம்பா குளத்தில் மீன்பிடிக்கச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.
ஆனால், இரவாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மறுநாள் கடம்பா குளத்திற்குச் சென்று தீவிரமாகத் தேடினர். தேடுதல் வேட்டையின் போது, குளத்து நீரில் வீசப்பட்ட மீன்வலையில் இசக்கிமுத்து சிக்கிய நிலையில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து உடனடியாகக் குரும்பூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இசக்கிமுத்துவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்துக் குரும்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

