தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்தவர் ஆசிர்வாதம் மகன் அந்தோணி ராஜ் (43). இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்டுவெல் காலனி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, முன்விரோதம் காரணமாகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், இக்கொலை வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் மதன்குமார் (எ) குட்டி ஜேசு (39) என்பவரைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி தாண்டவம் இன்று தீர்ப்பினை வழங்கினார். அந்தோணி ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மதன்குமார் (எ) குட்டி ஜேசு மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.