தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரவின்படி, விவசாய நிலங்களைச் சுற்றி வேலி மற்றும் தண்ணீர் வசதி கொண்டுள்ள விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்படுகின்றன.

விளாத்திகுளம் ஆற்றுப் பாலத்திற்குக் கீழே உள்ள வனத்துறை நர்சரியில் வைத்து தேக்கு, மகாகனி, குமிழ்தேக்கு, வேங்கை, கொய்யா, வேம்பு, ஈட்டி, மலைவேம்பு, எலுமிச்சை, சந்தனமரம், செம்மரம், மாதுளை, நெல்லி, கொடிக்காய், சீத்தா, பலா மற்றும் புளி ஆகிய பல்வேறு வகையான மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள், மரம் நடவு செய்ய உத்தேசித்துள்ள நிலத்தின் பட்டா நகல், குடும்ப உறுப்பினரின் அடையாளச் சான்று நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் நிலத்தின் உரிமையாளர் புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு விளாத்திகுளம் வனச்சரகர் முகைதீன் மற்றும் வனவர் பாண்டியராஜன் ஆகியோரைத் தொடர்புகொண்டு இலவச மரக்கன்றுகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.