தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவுக்கான பிரத்யேக இணையதளமான ஸ்டார் 2.0 (STAR 2.0) இணையதளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 5 நாட்களாக பத்திரப்பதிவு பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது.

பத்திரப்பதிவு துறையில் தானம், கிரையம், அடமானம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் ஸ்டார் 2.0 என்ற புதிய இணையதளம் மூலமாகவே ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த 22-10-2026 ஆம் தேதி முதல் இன்று 27-ம் தேதி வரை இந்த இணையதளத்தில் பொதுப்பணித்துறை (PWD) மதிப்பீட்டிற்கு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது, கட்டிடங்களை பொறுத்து புதிதாக ஆவணம் தயாரித்து பதிவேற்றம் செய்யும் போது, PWD மதிப்பீட்டிற்கு பிறகு அடுத்த பக்கத்திற்கு செல்ல முடியாமல் இணையதளம் முடங்கி விடுகிறது.

ஏற்கனவே 22-ம் தேதிக்கு முன்பு பதிவேற்றம் செய்யப்பட்ட டோக்கன்கள் மட்டுமே தற்போது பதிவு செய்யப்பட்டு வருகின்றன. புதிதாக யாரும் தானம், கிரையம் போன்ற ஆவணங்களை தயாரித்து பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது.

இதனால் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஏரல், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பத்திரப்பதிவுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் அரசுக்கு தினமும் லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

எனவே, பதிவுத்துறை தலைவர் உடனடியாக தலையிட்டு ஸ்டார் 2.0 இணையதளத்தில் உள்ள தொழில்நுட்ப கோளாறை சரி செய்து பத்திரப்பதிவு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.