தூத்துக்குடி மாநகர பகுதியில் பொதுச் சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் வகையில் மாநகராட்சியால் தினசரி குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் பிரித்து மறுசுழற்சி செய்தல் மற்றும் மக்கும் குப்பைகளை உரமாக்கி விவசாய மக்களுக்கு இலவசமாக வழங்குதல் போன்ற பணிகளை நிறைவேற்றி வருகிறது.

தற்போது வடகிழக்கு பருவ மழைக்காலம் துவங்கி உள்ள சூழ்நிலையில் மழை வெள்ளநீர் மாநகரப் பகுதியில் தேங்காமல் மழை நீர் வடிகால் வழியாக கடலை சென்றடை வகையில் அனைத்து மழைநீர் வடிகால்களும் சிறு பாலங்களும் சுழற்சி அடிப்படையில் தூர்வாரப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறான நிலையில் பொதுச் சுகாதார கள ஆய்வின்போது ஜெயராஜ் ரோடு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் கழிவு நீர் மற்றும் சமையலறை கழிவுகளை நேரடியாக மாநகராட்சியால் மூடி போட்டு (cover slab Storm water Drain) பராமரிக்கும் மழை நீர் வடிகாலில் எவ்வித அனுமதியும் பெறாமல் இணைத்ததின் காரணமாக மழை நீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு பொது சுகாதாரத்திற்கு பெரிதும் இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்டது கண்டறியப்பட்டது.

எனவே ,இதனை உடனடியாக சரி செய்து முறையாக பாதாள சாக்கடையில் இணைக்குமாறு அறிவுறுத்தியதுடன் மேற்படி குற்ற செயலுக்காக ரூபாய் 10000/- அபராதம் விதிக்கப்பட்டு மேற்படி நிறுவனத்தினரால் அபராத தொகை மாநகராட்சியில் செலுத்தப்பட்டுள்ளது.

எனவே, தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உருவாகும் கழிவுநீரை முறையாக அருகில் உள்ள பாதாள சாக்கடையில் இணைக்கப்பட வேண்டும் அல்லது கட்டிட வளாகத்திலேயே தொட்டி அமைத்து முறையாக வாகனங்கள் மூலம் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இது தவிர்த்து மழை நீர் வடிகால்களில் நேரடியாக வெளியேற்றும் கட்டிட உரிமையாளர்கள் மீது அபராதம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சி. ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.