தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "தவெக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு, தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையிலிருந்து தப்பி ஓடியுள்ளதாகப் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரே நாளில் 17 கைதிகள் தப்பிச் செல்லக்கூடிய ஒரு மோசமான சூழல் இன்று தமிழ்நாட்டில் நிலவுகிறது.

காவல்துறையில் நடக்கக்கூடிய தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது, அவர்கள் ஆளுங்கட்சியின் குரலாக மாறி, அரசியல் தலைவர்களுக்குப் பதில் அளிப்பது வருந்தத்தக்கது. காவல்துறை தங்களுடைய பணியைச் சரியாகச் செய்ய வேண்டுமே தவிர, ஆளும் கட்சியின் ஐடி விங் (IT Wing) போன்று செயல்படக் கூடாது" என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், "தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்துப் பொருட்களின் விலைவாசியும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதைத் தான் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன.

இதனைக் கண்டிக்கும் வகையில், திமுக தலைவர் அறிவுறுத்தலின்படி, மகளிர் அணி சார்பில் வரும் அக்டோபர் 31-ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி ஏற்றத்தைக் கண்டித்துப் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

எல்லாப் பொருட்களின் விலையும் ஏறிக்கொண்டிருக்கும் சூழலில், அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஆவின் பொருட்களின் விலையையாவது அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கலாம். ஆனால் அதையும் செய்யவில்லை. சுருக்கமாகச் சொன்னால், இந்த அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய எதுவுமே தற்போதைய ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இல்லை" எனக் கடுமையாகச் சாடினார்.