தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 7-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் - முத்து விஜயா தம்பதியரின் மகன் சந்தனகுமார் (29) இவருக்கு திருமணமாகவில்லை. கடந்த 5 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் சிங்கப்பூரிலிருந்து தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்குத் திரும்பியுள்ளார். ஊருக்கு வந்ததிலிருந்து சந்தனகுமார் அதிகமாக மது அருந்தி, குடிபோதைக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சந்தனகுமார் வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையப் போலீசார், சந்தனகுமாரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

