எல்நினோ தாக்கத்தால் ஏற்படக்கூடிய தட்பவெப்பநிலை மாற்றங்கள் மற்றும் தீவனத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வைக்கோல் மற்றும் தீவனப் பொருட்களை விரயம் செய்யாமல் சேமிக்க விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தி உள்ளார்.
பூமி வெப்பமயமாதல் மற்றும் எல்நினோ தாக்கம் காரணமாகத் தட்பவெப்ப நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு விவசாயம் மற்றும் கால்நடைத் தீவன உற்பத்தி பாதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளும் விதமாக விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தாங்கள் உற்பத்தி செய்யும் வைக்கோல் மற்றும் இதர தீவனப் பொருட்களை விரயம் செய்யாமல் சேமிக்கவும், சிக்கனமாகப் பயன்படுத்தவும், விளைநிலங்களிலேயே சேகரம் செய்யாமல் வீணாவதைத் தடுக்கவும், தொழிற்சாலை மற்றும் கால்நடை சாராத தொழில்களுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பல்லாண்டு தீவன சாகுபடி ஊக்குவிப்புத் திட்டம்:
2026-27ஆம் ஆண்டு பல்லாண்டு தீவன சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலம் பசுந்தீவன உற்பத்தியைப் பெருக்கும் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்திற்கு 160 ஏக்கர் குறியீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் 0.25 ஏக்கருக்கு உள்ளீடுகள் மற்றும் விதைகள் உட்பட ரூ.1,750 மானியமாக வழங்கப்படும். பயன்பெற விரும்பும் விவசாயிகள் குறைந்தது 25 சென்ட்டுக்கு குறையாமல் நீர் ஆதாரமுள்ள நிலம் வைத்திருக்க வேண்டும்; மேலும் இத்திட்டத்தை மூன்றாண்டு காலங்களுக்குப் பராமரிக்க வேண்டும்.
அதிகபட்சமாக 1 ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும். சிறு கால்நடை விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், ஆவின் நிறுவனத்திற்குப் பால் வழங்கும் நபர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
50% மானியத்தில் மின்சாரப் புல்வெட்டும் கருவிகள்:
2026-27ஆம் ஆண்டு மின்சக்தியால் இயங்கும் புல்வெட்டும் கருவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்திற்கு 30 எண்ணிக்கையிலான கருவிகள் 50% மானியத்தில் வழங்கப்படவுள்ளன.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளி குறைந்தது 2 கால்நடைகள் மற்றும் 0.25 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். புல்வெட்டும் கருவிகளை இயக்குவதற்குத் தேவையான மின்சார வசதி இருக்க வேண்டும். இதற்கு முன்னர் வேறு எந்த அரசுத் திட்டங்களிலும் பயனடைந்திருக்கக் கூடாது.
பயனாளி தனது 50% பங்குத் தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும். பெண்பயனாளிகள், மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட/விதவை பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்பும் தகுதியான பயனாளிகள், தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தின் கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

