தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி மகன் காளிராஜ் (42). இவர் திட்டங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.

இன்று அதிகாலை, சந்தையில் உள்ள ஒரு காய்கறிக் கடையில் காளிராஜ் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அதே சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வரும் அஞ்சரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் சின்னத்துரை (40) என்பவர், தூங்கிக் கொண்டிருந்த காளிராஜைக் கோடரியால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தார்.

கொலை செய்த கையோடு சின்னத்துரை கொப்பம்பட்டி காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். இதுகுறித்து கொப்பம்பட்டி போலீசார் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார், காளிராஜின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொலை சம்பவம் குறித்துத் தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் நேரில் சென்று சம்பவ இடத்தைப் பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட காளிராஜ், சின்னத்துரையை அடிக்கடி உருவக் கேலி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சனிக்கிழமை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, காளிராஜ் சின்னத்துரையைக் கீழே தள்ளித் தாக்கியதாகத் தெரிகிறது.

சந்தையில் அனைவரின் முன்னிலையிலும் தன்னை உருவக் கேலி செய்து தாக்கியதை அவமானமாகக் கருதிய சின்னத்துரை, ஆத்திரத்தில் காளிராஜைக் கோடரியால் வெட்டிக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் சின்னத்துரையிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட காளிராஜுக்குத் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அவரது மனைவிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கேலி கிண்டலில் தொடங்கிய பிரச்சினை கொலையில் முடிந்து, 3 குழந்தைகளைத் தவிக்க விட்டுச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.