காஞ்சிபுரம் மாவட்டம், வையாவூர், பாரதியார் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மகன் திருச்செல்வன் (40). இவர் சுற்றுலா வாகனத்தில் ராணிப்பேட்டையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்துவிட்டு, பின்னர் அங்கிருந்து ஊருக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வாகனம் வீரபாண்டியபட்டினம் பகுதிக்கு வந்தபோது, பெரியதாழை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த கிதிர் என்பவரது மகன் அசாருதீன் (29) என்பவர் தனது பல்சர் இருசக்கர வாகனத்தில் இவர்களுக்குப் பின்னால் வந்துள்ளார். அப்போது அசாருதீன், சுற்றுலா வேனை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது எதிர்திசையில் வந்த மற்றொரு பைக் மீது அவரது பைக் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளார். அப்போது சுற்றுலா வாகனத்தின் வலது பின்பக்க டயர் அசாருதீன் தலையின் மீது ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

