தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் அங்கமுத்து மகன் மாரிசாமி. இவர் மந்தித்தோப்பு சாலையில் சாஸ்திரி நகர் பேருந்து நிறுத்தம் அருகே மின்சாதனப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் சனிக்கிழமை இரவு 9 மணிக்குக் கடையைப் பூட்டிவிட்டுச் சென்ற அவர், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறைக்குப் பின் நேற்று திங்கள்கிழமை காலை கடையைத் திறக்க வந்துள்ளார்.

அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ. 20,000 ரொக்கம் மற்றும் மின்சாதனப் பொருள்கள் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாரிசாமி அளித்த புகாரின்பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், அதே பகுதியில் ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான பலசரக்குக் கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு உள்ளிருந்த பொருள்கள் திருடப்பட்டுள்ளன. மேலும், அதே பகுதியில் சீனிவாசன் நடத்திவரும் பலசரக்குக் கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைக்க முயன்றதும் தெரியவந்துள்ளது.

இதுமட்டுமின்றி, அதே பகுதியில் சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விட்டுவரும் முருகனுக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள், சிறிது தூரத்தில் அதனை நடுவழியில் விட்டுச் சென்றுள்ளனர்.

ஒரே பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்தத் திருட்டுச் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.