தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் வங்கியின் 2026-27-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு மற்றும் அரையாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியிடப்பட்டன.
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு 105 ஆண்டுகால சிறப்புமிக்க வரலாாற்றுடன் இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB) வங்கியின், செப்டம்பர் 30, 2026 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதி முடிவுகள் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் நடைபெற்ற வங்கியின் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் இத்தீர்மானங்கள் அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ். நாயர் நிதி முடிவுகளை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் தலைமை நிதி அதிகாரி, செயல் துணைத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நிதிநிலைச் சிறப்பம்சங்கள் (Q2 FY2027):
வங்கியின் நிகர லாபம் முந்தைய ஆண்டின் ₹318 கோடியிலிருந்து 42.09% வளர்ச்சி பெற்று ₹451 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் ஒட்டுமொத்த வணிகம் 27.25% வளர்ச்சியடைந்து ₹1,30,237 கோடியைக் கடந்துள்ளது. பங்குச் சந்தையில் வங்கி பட்டியலிடப்பட்டதிலிருந்து பதிவான மிக உயர்ந்த ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி இதுவாகும்.
மொத்த வைப்புத்தொகைகள் 25.49% அதிகரித்து ₹69,546 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் CASA வைப்புத்தொகை மட்டும் ₹17,629 கோடியாகும். கடந்த ஆண்டைக் காட்டிலும் மொத்த கடன்கள் 29.32% உயர்ந்து ₹60,691 கோடியாகியுள்ளது.
வங்கியின் மொத்த வாராக்கடன் விகிதம் (GNPA) கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த அளவாக 0.61%-ஆகக் குறைந்துள்ளது. நிகர வாராக்கடன் விகிதம் 0.14%-ஆகக் குறைந்து சிறப்பான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
வங்கியின் மூலதனப் போதுமான விகிதம் (CRAR) 30.96%-லிருந்து 32.39%-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிகழ்வில் பேசிய வங்கியின் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ். நாயர், "நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் எங்களது அடிப்படை வங்கிச் சேவைகளின் வலிமையை இச்செயல்பாடு பிரதிபலிக்கிறது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, வர்த்தகர்கள் மற்றும் MSME நிறுவனங்களின் வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவை வழங்க எங்களது வங்கி முழுமையாகத் தயாராக உள்ளது.
வாடிக்கையாளர்களுடன் பல ஆண்டுகளாக நாம் கொண்டுள்ள வலுவான உறவுகளும், உள்ளூர் வணிகம் குறித்த ஆழமான புரிதலும் நமது தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குகின்றன" எனத் தெரிவித்தார்.
மேலும், அகில இந்திய அளவில் 17 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் 631 கிளைகள் மற்றும் 13 மண்டல அலுவலகங்களுடன் இயங்கிவரும் TMB வங்கி, நடப்பு காலாண்டில் புதிதாக 3 கிளைகளைத் தொடங்கியுள்ளதுடன், 53 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்குச் சேவை புரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

