கோவில்பட்டி அருகே மின் கம்பத்தில் பைக் மோதிய விபத்தில், ஆந்திராவில் பணியாற்றி வந்த சி.ஆர்.பி.எஃப் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் சாமிதுரை (43). இவர் ஆந்திர மாநிலத்தில் சி.ஆர்.பி.எஃப் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். சொந்த ஊரான கோவில்பட்டிக்கு விடுமுறையில் வந்திருந்த சாமிதுரை, நேற்று கோவில்பட்டி பெத்தேல் பகுதி அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சாமிதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

