தூத்துக்குடியில் குண்டும் குழியுமாக உள்ள பிரதான சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் எம்எஸ் முத்து வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியி்ட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் உள்ள பிரதான சாலைகளின் பல்வேறு இடங்கள் குண்டும் குழியுமாகக் காணப்படுவதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக, முக்கிய போக்குவரத்து நிறைந்த சாலைகளில் சாலைகள் சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, குண்டும் குழியுமாக உள்ள சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சாலைகளின் மோசமான நிலை வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால், இனியும் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி மாநகரின் பிரதான சாலைகள் மட்டுமின்றி, பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் இணைப்புச் சாலைகளிலும் பல இடங்களில் பள்ளங்கள் காணப்படுகின்றன. மழைக்காலங்களில் இந்தப் பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால், அவற்றின் ஆழம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரிக்கிறது. இரவு நேரங்களில் பயணம் செய்வோர் பள்ளங்களை அடையாளம் காண முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இதனால் வேலைக்குச் செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

சாலைகளை முறையாகப் பராமரிக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம், சேதமடைந்த சாலைகள் குறித்து உரிய கவனம் செலுத்தி, அவற்றைச் சீரமைப்பதில் தாமதம் செய்யக்கூடாது.

விபத்து ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட, விபத்துகளைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதே நிர்வாகத்தின் முக்கியக் கடமையாகும்.

எனவே, தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து பிரதான சாலைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, குண்டும் குழியுமாக உள்ள இடங்களைக் கண்டறிய வேண்டும். குறிப்பாக, அதிக போக்குவரத்து உள்ள சாலைகள் மற்றும் விபத்து அபாயம் நிறைந்த பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து, தரமான முறையில் சாலைகளைச் சீரமைக்க வேண்டும். சாலைப் பணிகளை விரைந்து முடிப்பதுடன், பணிகளின் தரத்தையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், சாலைகள் சீரமைக்கப்படும் வரை விபத்து அபாயம் உள்ள இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள் அமைத்து, இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்குப் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்.

தூத்துக்குடி மக்களின் பாதுகாப்பையும் உயிரையும் கருத்தில் கொண்டு, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை உடனடியாக ஆய்வு செய்து சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.