வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த ஆய்வுகளை மாவட்ட காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, அவசர காலங்களில் பொதுமக்களைப் பாதுகாத்து மீட்பதற்காக மாவட்ட காவல்துறையின் பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் செயல்படும் திறன் மற்றும் தயார் நிலை குறித்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. சிவ பிரசாத், இன்று மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் நேரில் பார்வையிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, பேரிடர் காலங்களில் வெள்ளம் அல்லது பாதிப்புகள் ஏற்படும் இடங்களுக்கு விரைந்து சென்று பொதுமக்களுக்கு உடனடி உதவி வழங்க வேண்டும் எனவும், மீட்புப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள எந்நேரமும் முழு விழிப்புணர்வுடனும் தயார் நிலையிலும் இருக்க வேண்டுமெனவும் பேரிடர் மீட்புப் படையினருக்கு எஸ்பி அறிவுறுத்தல்களை வழங்கினார்.