தூத்துக்குடி மாவட்டம், கீழ அரசடி கிராமத்திற்கு உட்பட்ட அய்யனார்புரம் பகுதியில் இயங்கி வரும் மதுபானக் கடை மற்றும் மனமகிழ் மன்றத்திற்கு எதிராகப் பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் இரவிலும் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

அய்யனார்புரம் பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள மதுபானக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி இன்று காலை பொதுமக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டத்தைத் தொடங்கினர். திரளான பெண்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற இந்தப் போராட்டம், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தவும், கலைந்து போகச் செய்யவும் திட்டமிட்டு, தாளமுத்துநகர் பகுதியிலிருந்து 20-க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட ரவுடி கும்பல் வரவழைக்கப்பட்டுள்ளதாகத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்திப் போராட்டத்தைச் சீர்குலைக்கச் சமூக விரோதிகள் சிலர் முனைப்பு காட்டி வருவதால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

எனவே, போராட்டக் களத்தில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்குவதோடு, மக்கள் போராட்டத்திற்கு எதிராகச் சமூக விரோத நபர்கள் ஊடுருவுவதைத் தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.