தூத்துக்குடி பண்டாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணபதி (42). இவர் தூத்துக்குடி புதிய துறைமுகம் – மதுரை பைபாஸ் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதியது.
இவ்விபத்தில் கணபதியின் காலில் முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றார். இச்சம்பவம் குறித்துச் சிப்காட் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இவ்வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சமரச நீதிமன்றத்தில் நீதிபதி தாண்டவம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, விபத்தில் காயமடைந்த கணபதிக்கு ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் கணபதி தரப்பில் வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் ஆஜராகி வாதாடினார்.

