அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள கடலில் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனிடையே, ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முன்தினம், மறுதினங்களில் காலையில் கடல் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில், இன்று காலையில் கடல் சுமார் 50 அடி உள்வாங்கியது. அப்போது பச்சை நிற பாசிப்படிந்த பாறைகள் அதிக அளவு வெளியே தெரிந்தன. மேலும், கருப்பசாமி சிலை ஒன்றும் தென்பட்டது. இதுபோல் ஏராளமான சிலைகள் கடற்கரையில் காணப்படுகிறது. இந்த சிலைகளால் கடலில் நீராடும் பக்தர்கள் காயம் ஏற்பட்டு, பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே கடற்கரையில் கரை ஒதுங்கும் சிலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, கடற்கரையில் ஒதுங்கும் சிலைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு வருவதாகவும் பக்தர்கள் பாதுகாப்புடன் நீராடுமாறும் அறிவுறுத்தினர்.

