தூத்துக்குடியில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மாநில காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினரின் காரை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்திய சம்பவத்திற்கு, மாநகர் மாவட்டக் காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி கக்கன்ஜி நகரில் வசித்து வருபவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சாமுவேல் ஞானதுரை. இவரது வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை, நேற்று இரவு வந்த மர்ம நபர்கள் சிலர் கொடூரமாக அடித்து நொறுக்கிச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்துத் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.எம். சகாயராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் நிர்வாகியின் கார் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்குத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இத்தகைய வன்முறைக் குற்றச் செயலில் ஈடுபட்ட நபர்களைக் காவல் துறையினர் உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சரிடம் நேரடியாகப் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.