தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி சிவபிரசாத் உத்தரவின் பேரில், நகர காவல் துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி சுனில் அறிவுறுத்தலின்படி, போக்குவரத்து ஆய்வாளர் துரைமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் சண்முகபாலன் மற்றும் போலீசார் இன்று காலை தூத்துக்குடி மடத்தூர் 3-வது மைல் பகுதியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து 3-வது மைல் நோக்கிச் சென்ற ஒரு மினி பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் அதிக மதுபோதையில் இருப்பதாக அதில் பயணித்த பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அந்த மினி பஸ்சை நிறுத்தி, ஓட்டுநர் சுரேஷ் மற்றும் நடத்துநர் மகாராஜன் ஆகிய இருவரையும் உதவி ஆய்வாளர் சண்முகபாலன் 'ப்ரீத் அனலைசர்' கருவி மூலம் பரிசோதித்தார். அதில் இருவரும் அதிக மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து, அவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவச் சான்று பெறப்பட்டது. ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமம் வைத்திருந்த இவ்விருவருக்கும் மதுபோதையில் வாகனம் இயக்கியதற்காக தலா 10,000 வீதம் மொத்தம் ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வந்த ஆட்டோக்களை சோதனையிட்டபோது, எந்தவித ஆவணங்களும் இன்றி மதுபோதையில் ஆட்டோவை ஓட்டி வந்த ஒரு ஓட்டுநருக்கும், உரிய ஆவணங்கள் இருந்தும் மதுபோதையில் ஆட்டோவை இயக்கிய மற்றொரு ஓட்டுநருக்கும் சேர்த்து மொத்தம் ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இன்று ஒரே நாளில் மதுபோதையில் வாகனங்களை இயக்கிய 4 பேரிடமிருந்து மொத்தம் ரூ.45,000 அபராதம் வசூலிக்கப்பட்டது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் பாராட்டு:

பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஓட்டுநர்கள் இதுபோன்ற ஆபத்தான தவறுகளில் ஈடுபடக்கூடாது என்றும்; பஸ், மினி பஸ், ஆட்டோ, கார் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மதுபோதையில் வாகனம் ஓட்டினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

பயணிகளின் உயிரோடு விளையாடும் போதை ஓட்டுநர்களை உடனடியாகக் கண்டறிந்து அபராதம் விதித்த போக்குவரத்து காவல் குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.