முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான காத்திருப்புக்கூடம் தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
பிரசித்தி பெற்ற பரிகாரத் தலமாக விளங்கும் திருச்செந்தூர் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர். குறிப்பாக, ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி விரதம் இருப்பது வழக்கமாகும்.
பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில், கோவில் ராஜகோபுரம் அருகே பிரம்மாண்டமான பக்தர்கள் காத்திருக்கும் கூடம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது இதன் அனைத்துப் பணிகளும் முழுமையாக நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டுள்ளது.
வெயில் மற்றும் கடுமையான மழைக்காலங்களிலும் பக்தர்கள் எந்தவித சிரமமுமின்றிப் பாதுகாப்பாகத் தங்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தின் இந்த சிறப்பான நடவடிக்கையால் திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

