"மாணவர்கள் சமூக வலைதளங்களைப் பொழுதுபோக்குக்காக மட்டும் பயன்படுத்தாமல், தங்களுடைய வளர்ச்சிக்கும் தொழில் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்த வேண்டும்" என்று மும்பை நியூக்ளியர் புரொஜெக்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் விஞ்ஞானியுமான காளிராஜ் பேசினார்.

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 27-வது பட்டமளிப்பு விழா கல்லூரிக் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு நாடார் உறவின்முறைச் சங்கத் தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலாளர் கண்ணன், நாடார் உறவின்முறைச் சங்கப் பொருளாளர் சுரேஷ்குமார், கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் செல்வராஜ் வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மும்பை நியூக்ளியர் புரொஜெக்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் விஞ்ஞானியுமான காளிராஜ், இளங்கலை பிரிவில் 173 மாணவர்களுக்கும், முதுகலை பிரிவில் 17 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கிப் பேசியதாவது: மாணவர்கள் தற்போது பட்டதாரிகளாகச் சமுதாயத்திற்குள் அடி எடுத்து வைக்கிறீர்கள். நீங்கள் பெற்ற பட்டம் சமுதாயத்திற்குப் பயனுள்ள வகையில் அமைய வேண்டும். தொழில்நுட்பங்களை முறையாகப் பயன்படுத்தித் தொழில்முனைவோராக உருவெடுத்து, மற்றவர்களுக்கு வேலை அளிப்பவர்களாக உயர வேண்டும்.

இந்திய நாடு திறமையும் இளமையும் நிறைந்த நாடாகும். இந்தியாவில் சராசரி வயது 28-29 ஆக உள்ளது. ஆனால் சீனாவில் 40-45 ஆகவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 45-50 ஆகவும் இருக்கிறது. எனவே, சமூக வலைதளங்களைப் பொழுதுபோக்குக்கு மட்டுமே பயன்படுத்தாமல் வளர்ச்சிக்கும் தொழிலுக்கும் பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் பட்டம் பெற்று தொழில் தொடர்பாக வெளிநாடுகளில் பணிபுரிந்தாலும், அது இந்தியாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவுவதாக அமைய வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அருண், தங்கமணி, ராஜ்மோகன், சரவணகுமார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கார்த்திகேயன், வழக்கறிஞர் ராஜேஷ்கண்ணன், கல்லூரித் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், நாடார் உறவின்முறைச் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.