கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே கூகுள் மேப் வழிகாட்டுதலை நம்பிச் சென்ற கார் குறுகலான பாதையில் மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் இருந்து நான்கு பேருடன் குலசேகரம் நோக்கி வந்த கார் ஒன்று, மேல்புறம் செம்மங்கலை பகுதி வழியாக வந்துள்ளது. அப்போது கூகுள் மேப் காட்டிய வழியை நம்பி ஓட்டுநர் காரை இயக்கியுள்ளார். ஆனால், அந்தப் பாதை கார்கள் செல்வதற்கானது அல்ல; இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்வோர் மட்டும் செல்லக்கூடிய மிகக் குறுகலான அடி பாதையாகும்.
இதையறியாமல் அந்தப் பாதைக்குள் புகுந்த கார், இருபுறமும் உள்ள சுவர்களில் மாட்டிச் சிக்கிக்கொண்டது. காரை முன்னோக்கியும் இயக்க முடியாமல், பின்னோக்கியும் எடுக்க முடியாமல் ஓட்டுநரும் பயணிகளும் செய்வதறியாது தவித்தனர்.
சத்தம்கேட்டு உடனடியாக ஓடிவந்த அப்பகுதி ஊர் மக்கள், ஒன்றிணைந்து காரைத் தள்ளிப் பத்திரமாக அந்தக் குறுகலான பாதையில் இருந்து வெளியே மீட்டனர். நவீன தொழில்நுட்பத்தை முழுமையாக நம்பிச் சென்றதால் ஏற்பட்ட இந்த விபரீதம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

