தேனி மாவட்டம் பெரியகுளம் கள்ளிப்பட்டி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2019 முதல் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றியவர் ரவிகுமார என்பவராவார். இவர் பின்னர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனிடையே, கள்ளிப்பட்டி பள்ளி முதல்வர் அருளானந்தன்கோவில், மற்றும் அம்புரோஸ், டேனியல் ஜேம்ஸ், எமர்சன் டேவிட் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ரவிகுமார் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "நான் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இந்து. பள்ளியில் மேல் சாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் என்னையும், பிற பட்டியலின சாதியைச் சேர்ந்த ஆசிரியர்களையும் பாகுபாட்டுடன் நடத்தி அவமானப்படுத்தினர். இது தொடர்பாகப் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி எல். விக்டோரியா கெளரி விசாரித்தார். பள்ளி முதல்வர் தரப்பில் வழக்கறிஞர் எஸ். பாஸ்கர் மதுரம் ஆஜராகி வாதாடுகையில், "மனுதாரர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார். உசிலம்பட்டி எஸ்டிஏ திருச்சபையில் 2015-இல் ஞானஸ்நானம் பெற்றுள்ளார். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திற்கு எதிராகச் செயல்பட்டு வந்ததால் குடியாத்தம் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்" என்று கூறி அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்தார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதி எல். விக்டோரியா கெளரி பிறப்பித்த உத்தரவில்: "மனுதாரர் எஸ்டிஏ திருச்சபையில் ஞானஸ்நானம் பெற்றதற்கு ஆதாரம் உள்ளது. ஆனால் மனுவில் தான் ஒரு இந்து எனக் குறிப்பிட்டுள்ளார். வழக்கு தொடரும் நபர் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
வன்கொடுமை புகாரானது பாதிக்கப்பட்டவரை அவமதித்தல், அச்சுறுத்துதல் போன்றவை வேண்டுமென்றே நடந்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரை அவரது பட்டியலின சாதி அல்லது பட்டியலின பழங்குடியின அடையாளத்தின் காரணமாக அவமானப்படுத்துவது நோக்கமாகவும், அச்சம்பவம் பொது இடத்தில் நடந்ததாகவும் இருக்க வேண்டும். மனுதாரர் புகாரில் இந்த விவரம் இல்லை. நிர்வாக நடவடிக்கையைத் துன்புறுத்தல் எனக் கூறி போலீஸ் நடவடிக்கைக்கு உத்தரவிட முடியாது.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சிறப்புத் தண்டனைச் சட்டங்களை அவற்றின் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள்ளேயே செயல்படுத்த வேண்டும். இந்து மதத்திலிருந்து மாறிய பிறகு மீண்டும் பழைய மதத்திற்குத் திரும்பியதற்கான ஆதாரம் இல்லாத நிலையில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோர முடியாது" எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

