நெல்லை கவின் ஆணவப்படுகொலை வழக்கிலிருந்து முதன்மை குற்றவாளி சுர்ஜித்தின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் விடுவிக்கப்பட்ட தீர்ப்பைக் கண்டித்து, கவினின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் அவரது பெற்றோர் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நெல்லையில் ஐ.டி ஊழியர் கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுர்ஜித்தின் பெற்றோரும் காவல் உதவி ஆய்வாளர்களுமான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.பெற்றோரின் கோரிக்கைகள்:
இந்தத் தீர்ப்பைக் கண்டித்தும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கவினின் பெற்றோர் ஆறுமுகமங்கலத்தில் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
"இனி எந்தவொரு குடும்பத்திற்கும் இதுபோன்ற ஆணவப்படுகொலைத் துயரம் நிகழக் கூடாது; கவினின் கொலைக்குக் காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்" என்று அவர்கள் வலியுறுத்தினர்.

