தந்தை பெரியார் சிலை மற்றும் திமுக எம்.பி. கனிமொழி குறித்துச் சமூக வலைதளங்களில் அவதூறாகப் பதிவிட்ட வழக்கில், பாஜக தலைவர்களுள் ஒருவரான எச்.ராஜாவுக்குச் சிறப்பு நீதிமன்றம் விதித்த 6 மாத சிறை தண்டனையைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டதைச் சுட்டிக்காட்டி, "தமிழகத்திலும் பெரியார் சிலை அகற்றப்படும்" என பாஜக தலைவர்களுள் ஒருவரான எச்.ராஜா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், திமுக எம்.பி. கனிமொழி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைப் பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்துத் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் அளித்த புகார்களின் பேரில், எச்.ராஜா மீது ஈரோடு காவல்துறையினர் 2 தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்தனர்.
இவ்வழக்குகள் சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. விசாரணையின் முடிவில், கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எச்.ராஜாவுக்கு 2 வழக்குகளிலும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்துச் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து எச்.ராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, "பாஜக நிர்வாகி எச்.ராஜாவின் சமூக வலைதளப் பதிவுகளால் சமூகத்தில் எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினையோ அல்லது பதற்றமான சூழலோ ஏற்பட்டது என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை.
இத்தகைய முக்கியக் காரணியைக் கவனத்தில் கொள்ளாமல் கீழ் நீதிமன்றம் எச்.ராஜாவுக்கு 2 வழக்குகளிலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தது ஏற்புடையதல்ல" எனக் கூறி, சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனைக்கான உத்தரவை முழுமையாக ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

