தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வானமாமலை தலைமையிலான காவல் துறையினர், இளையரசனேந்தல் சோதனைச் சாவடி பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மறித்துச் சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடி எப்போதும்வென்றான் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (49) மற்றும் சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த ரமேஷ் (47) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

கைதான இருவரிடமிருந்தும் ரூ.10 லட்சம் மதிப்பிலான 600 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், ரூ.7.5 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை ஆய்வாளர் வானமாமலை பறிமுதல் செய்தார். மேலும், இக்கடத்தல் பின்னணியில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.