தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் குலசேகரநல்லூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், சிறப்புப் பார்வையாளராகக் கலந்துகொண்டார்.

இக்கிராம சபை கூட்டத்தில் கூட்டப் பொருள்களாக, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் VB GRAM (G) திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல், ஐல் ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், சீமை கருவேல மரங்கள் அகற்றுதல் மற்றும் இதர பொருள்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில் "தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குலசேகரநல்லூர் ஊராட்சியில் அண்ணல் காந்தியடிகளின் அவர்கள் 158வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் கிராம சபை கூட்டத்திற்கு கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மகாத்மா காந்தியடிகளின் கோட்பாடுகளை பெற்றோர்கள், குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். அவருடைய அகிம்சையின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது பெற்றோர்களின் பொறுப்பு.

மேலும், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை ஆரம்ப பள்ளிகளிலிருந்து தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளை கற்றுக் கொடுப்பதன் மூலம் இதர பாடங்களான அறிவியல், கணக்கு போன்ற பாடங்களை எளிதாக கற்றுக் கொள்ள முடியும். மேலும், உங்கள் கிராமங்களில் உள்ள நூலகத்திற்கு குழந்தைகளை அழைத்துச் சென்று புத்தகங்களை படிக்க வையுங்கள். அவ்வாறு படிக்க வைப்பதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கை பயனுள்ளதாக அமையும். நூலகம் சென்று பல்வேறு விதமான புத்தகங்கள் மற்றும் போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் உள்ளன. அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.

தொடர்ந்து, 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் ஐ,டி,ஐ, பாலிடெக்னிக் படிப்புகளையும் உங்களுடைய குழந்தைகளை படிக்க வையுங்கள். நம் மாவட்டத்திலேயே அவர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளது. குறிப்பாக 2 நாட்களுக்கு முன்னதாக திறன் மாநாடு ஒன்றை நடத்தினோம். அதில் மாணவர்களுக்கு தொழில் வளர்ச்சி குறித்து, பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்டு கருத்துரை வழங்கினோம். குறிப்பாக அடுத்த தலைமுறைகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பொறுப்பு உள்ளது என்பதை கருதுகிறேன்.

மேலும், பருவமழை காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் தடுப்பு பாதுகாத்திட, சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கொசு, புழுக்கள் உருவாகுவதை தடுக்கும் வகையில், வீட்டில் பயன்படுத்தப்படும் சிரட்டை, ஆட்டு உரல், டயர் போன்றவற்றை அப்புறப்படுத்தவும், வீட்டு தொட்டிகளை குளோரினேஷன் போட்டு தூய்மையாக பயன்படுத்திடவும், பெற்றோர்கள் 14 வயது முடிந்த பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக HPV மருந்தினை 100 சதவீதம் செலுத்திட வேண்டும்.

மேலும் பொதுமக்கள் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து, பயன்பெற வேண்டும். அரசு அலுவலர்கள் பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியானவர்களுக்கு, அவர்களுக்கான நலத்திட்டங்கள் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்தார். பின்னர் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஏற்றுக்கொள்ள அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 32 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கான ஆணைகளையும், மகளிர் திட்டம் சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 மதிப்பில் ரூ.2,50,000 வங்கிக் கடனுதவியும், வேளாண்மைத்துறை சார்பில் 2 விவசாயிகளுக்கு உளுந்து விதை, திரவ உயிர் உரங்கள், நுண்ணுட்ட உரங்களும், தோட்டக்கலை துறை சார்பில் 2 விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனத்திற்கான பணி ஆணைகளையும், 2 விவசாயிகளுக்கு உயிர் உரங்களும், பொது சுகாதாரத் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், 4 பயனாளிகளுக்கு MTM Kit box போன்ற அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்

முன்னதாக பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து அமைக்கப்பட்டுள்ள அரங்கினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் திட்ட இயக்குநர்கள் நா.சரவணன் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), நாகராஜன் (மகளிர் திட்டம்), ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் இளஞ்சேரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஐகோர்ட் ராஜா, சுப்புலட்சுமி, வட்டாட்சியர் அய்யனார் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.