ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்தவ மதப் பயனாளிகளுக்கு அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் 550 கிறித்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000/- வீதமும் 50 கன்னியாஸ்திரிகள் / அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000/- வீதமும் ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்ப படிவத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 31.01.2027க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி - ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005. என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

