டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறி நுழைய முயன்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைமைச் செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா ஆகியோருக்கு 5 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மற்றும் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் பதவி விலகல் தொடர்பாக இந்தியா கூட்டணியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காந்தி ஜெயந்தி அன்று ஆம் ஆத்மி கட்சி, இந்திய மாணவர் சங்கம் (SFI), இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI) உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தின. தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
இதனிடையே, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த டெல்லி காவல்துறை தடை விதித்தது. இந்நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைமைச் செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் மற்றும் தேசிய செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரன்கா ஆகிய இருவரும் தடையை மீறி நேற்று காலை ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்தனர்.
காவல்துறையினர் தடையை சுட்டிக்காட்டிய நிலையிலும், அவர்களுடன் தேசியக் கொடியை ஏந்தி வந்த 10-க்கும் மேற்பட்டோர் பூட்டியிருந்த கதவுகளின் மீது ஏறி மறுபுறம் சென்றனர். இதையடுத்து அத்துமீறலில் ஈடுபட்ட சவுரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா மற்றும் அவர்களுடன் வந்த அனைவரையும் டெல்லி போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தலைமைச் செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா ஆகிய இருவரையும் 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் இருவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
இது குறித்து வழக்கறிஞர் அபிஷ்த் ஹேலா கூறுகையில், "அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடும் என்ற காவல்துறையின் ஊகத்தின் அடிப்படையில் 5 நாட்கள் காவல் விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் திரண்டு வர வேண்டும் என அழைப்பு விடுத்ததாகப் போலீசார் நீதிமன்றத்தில் பொய்யான தகவலைக் கூறியுள்ளனர். அவர்கள் எந்த ஒப்பந்த மீறலிலும் ஈடுபடவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

