தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அஞ்சல் நிலையம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ஒரு கார் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 7 பேர் லேசான காயங்களுடன் தப்பினர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் (40), தனது மனைவி ரம்யா, உறவினர்கள் மற்றும் குழந்தைகளுடன் நேற்று வியாழக்கிழமை காரில் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் முடித்துவிட்டு மதுரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அதேவேளையில், சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கணேஷ் (63), அவரது நண்பர் வித்தியாசாகர் (63) மற்றும் குடும்பத்தினர் மற்றொரு காரில் திருச்செந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
காரை வித்தியாசாகர் ஓட்டி வந்த நிலையில், ஆறுமுகநேரி அஞ்சல் நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக இரு கார்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் விஸ்வநாதனின் கார் தலைகீழாகக் கவிழ்ந்தது. மற்றொரு காரின் முன்பக்க டயர் வெடித்துச் சாலையின் நடுவே நின்றது.
இவ்விபத்தில் இரு கார்களிலும் பயணித்த குழந்தைகள் உட்பட 7 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த ஆறுமுகநேரி காவல் துறையினர், மீட்பு வாகனத்தை வரவழைத்து விபத்துக்குள்ளான கார்களைச் சாலையிலிருந்து அகற்றிப் போக்குவரத்தைச் சீர்செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

