தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மணக்கரை அனந்தநம்பிகுறிச்சி புதுக்காலனி தெருவைச் சேர்ந்தவர் உலகமுத்து (45). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர், நேற்று பிற்பகல் அனந்தநம்பிகுறிச்சி காட்டுப் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
மாலை 3 மணியளவில் அப்பகுதியில் திடீரெனக் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதையடுத்த உலகமுத்து ஆடுகளை ஊருக்குள் ஓட்டிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இடி-மின்னல் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த முறப்பநாடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, உலகமுத்துவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து முறப்பநாடு காவல் ஆய்வாளர் ஹரிகரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

