எல்-நினோ பருவநிலை மாற்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்க விவசாயிகள் பயிர் மற்றும் கால்நடை காப்பீடு செய்ய வேண்டும் என்றும், நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் பணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என்றும் ஆட்சியர் ஆனந்த் மோகன் கேட்டுக்கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மன்னார்கோவில் சமுதாய நலக்கூடத்தில் இன்று (14.10.2026) நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 78 பயனாளிகளுக்கு ரூ.39.72 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் வழங்கினார்.
முன்னதாக, இம்முகாமில் சுகாதாரம், வேளாண்மை, தோட்டக்கலை, மகளிர் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயல்முறைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் பேசியதாவது: "பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து தீர்வு காண வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, இம்முகாமில் பெறப்பட்ட 241 மனுக்களில் 150 மனுக்கள் ஏற்கப்பட்டு, 78 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிக்கும் தங்க மோதிரம் வழங்கும் திட்டம், மகளிர்க்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டம் மற்றும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்றவை சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம் மாணவர்களின் பள்ளி வருகையையும் கற்றல் திறனையும் அதிகரித்துள்ளது.
விவசாயிகள் அரசின் மானியங்கள் மற்றும் நலத்திட்டப் பயன்களைப் பெறத் தங்கள் விபரங்களை அரசுப் பதிவுகளுடன் இணைத்து புதுப்பித்துக்கொள்ள வேண்டும். எல்-நினோ பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பயிர்களைப் பாதுகாக்கவும், கால்நடைகளைப் பாதுகாக்கவும் உரிய காப்பீடுகளைச் செய்துகொள்ள வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் அரசு நிர்ணயித்த தொகையை விடக் கூடுதலாகப் பணம் வசூலிக்கப்பட்டால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் நேரடியாகப் புகார் தெரிவிக்கலாம்.
மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்காமல் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்திய ஆட்சியர், இளைஞர்களைப் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், மன்னார்கோவில் ஊராட்சியைப் போதைப்பொருள் இல்லாத கிராமமாக மாற்றப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, மன்னார்கோவில் நியாயவிலைக் கடை, அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுப் பணிகள் குறித்தும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ்குப்தா, தனித்துணை ஆட்சியர் ரோஷன்பேகம், மன்னார்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜோதி கல்பனா, துணைத் தலைவர் நிர்மலா, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் ஆ. குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

