தமிழகத்தில் பாஜகவை முழுநேரமாக வலுப்படுத்தும் நோக்கில், தனது மத்திய இணை அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்வதாக பிரதமர் மோடிக்கு எல். முருகன் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி தமிழக பாஜக மாநிலத் தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு தமிழகத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற வேல் யாத்திரையை இருமுறை முன்னின்று நடத்தினார். 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட அவர், வெற்றி வாய்ப்பை இழந்தார். இருப்பினும், அவர் மாநிலத் தலைவராக இருந்தபோது பாஜக சார்பில் போட்டியிட்ட 4 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வாகினர்.

இதையடுத்து, மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 2021 ஜூலை 7-ம் தேதி மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து 2024-ம் ஆண்டிலும் மீண்டும் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராகப் பணியாற்றி வந்தார்.

பிரதமருக்கு எழுதிய கடிதம்:

இந்நிலையில், தமிழகத்தில் கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட விரும்பி, தனது பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி பிரதமர் மோடிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: "தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்தும் பணியில் முழுநேரமாக ஈடுபடுவதற்காக, மத்திய இணை அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திற்கும், வீதிக்கும் சென்று மக்களைச் சந்தித்து, கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பாஜகவின் வளர்ச்சியை விரிவுபடுத்த விரும்புகிறேன்.

மேலும், 2029 மக்களவைத் தேர்தலுக்குக் கட்சியைத் தயார்படுத்தி, தங்களின் தலைமையில் தமிழகத்திலிருந்து அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்காக எனது முழு நேரத்தையும் ஆற்றலையும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தங்களின் தலைமையிலான அரசில் பணியாற்ற வாய்ப்பளித்ததற்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நயினார் நாகேந்திரனுக்கு வாய்ப்பா?

இதனிடையே, தமிழக பாஜகவின் தற்போதைய மாநிலத் தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனை மாற்றத் தலைமை திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு மத்திய அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.