கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் அன்பு உத்தரவின்படி, உதவி வனப் பாதுகாவலர்கள் ஸ்ரீவல்சன், நிதின் ஆகியோரின் வழிகாட்டுதலில், பூதப்பாண்டி வனச்சரக அலுவலர்அன்பழகன் தலைமையில் பூதப்பாண்டி மற்றும் அழகியபாண்டியபுரம் வனச்சரகங்களின் சிறப்புப் படையினர் கூட்டுத் தணிக்கை மற்றும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனக் குற்றத் தடுப்பு விசாரணையில், ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தெற்குமலை காப்புக்காடு அருகே கோட்டக்கரை பகுதியில் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை-1 இல் இடம்பெற்றுள்ள கடமான் (மிளா) விலங்கை, 'அவுட்டுக் காய்' எனும் நாட்டு வெடிகுண்டு வைத்து வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்தது தெரியவந்தது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய காட்டுப்புதூரைச் சேர்ந்த தருமராஜ் மகன் டி. ராஜன் (36) என்பவரை வனத்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் வேட்டைக்கு நிலத்தில் வைத்திருந்த அவுட்டுக் காய் நாட்டு வெடிகுண்டு மற்றும் ஈட்டியுடன் கையும் களவுமாகப் பிடிபட்டார். கைது செய்யப்பட்ட ராஜன், வன வழக்குகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
வனவிலங்குகளைப் பாதுகாக்கவும், வனக் குற்றங்கள் மற்றும் வனத்தீ சம்பவங்களைத் தடுக்கவும் தீவிர கண்காணிப்புப் பணிகள் தொடரும் என்றும், இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

