கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தையில் இருந்து அழகியமண்டபம் செல்லும் சாலையில் ஆலங்கோடு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 11-ம் தேதி இரவு அப்பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த கனமழை பெய்தது. அப்போது திடீரென ஏற்பட்ட மின்னல் பள்ளியின் கூரையைத் தாக்கியது. இதனால் ஏற்பட்ட அதிக மின்னழுத்தம் காரணமாக மின்சார ஒயர்கள், தலைமை ஆசிரியர் அறையில் இருந்த சிசிடிவி தொலைக்காட்சி, லேப்டாப், டேபிள் பேன் மற்றும் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சில கோப்புகளும், மாணவர்களுக்குக் கொடுக்க வைத்திருந்த புத்தகங்களும் எரிந்து நாசமாயின.
மின்னல் தாக்கி மின் சாதனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு கரும்புகை எழுந்துள்ளது. சுவர், டேபிள், அடுக்கி வைத்திருந்த கோப்புகள் உள்ளிட்டவையும் தீயில் கருகி சாம்பலாகிக் கிடந்தன. மறுநாள் (12-ம் தேதி) காலை ஊழியர்கள், தலைமை ஆசிரியர் அறை கதவைத் திறந்தபோதுதான் இந்தச் சம்பவம் தெரியவந்தது.
அப்போது அறை முழுவதும் புகை மூட்டமாக இருந்தது. இது குறித்துத் தலைமை ஆசிரியர் உயர் அதிகாரிகளுக்கும், தக்கலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தைப் பார்வையிட்டனர். இந்தச் சம்பவம் இரவில் நடந்ததால் மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள் யாரும் இல்லை; இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

