திருநெல்வேலியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் விதைப்பந்து தயாரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அண்ணா பல்கலைக்கழகப் புல முதல்வர் (டீன்) எஸ்.ராஜகுமார் தலைமை தாங்கினார். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பா.மதுமதி, ஜா.ஜூட்ஸ் மற்றும் பேராசிரியை உஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தினமலர் நாளிதழின் நிர்வாக இயக்குநர் தினேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, விதைப்பந்துகளின் முக்கியத்துவம், நாளிதழ்கள் வாசிப்பின் அவசியம் மற்றும் கல்வியின் பலன் குறித்து பல்கலைக்கழக மாணவ-மாணவியருடன் உற்சாகமாக உரையாடினார்.

தொடர்ந்து, சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ.திருமாறன் விதைப்பந்து தயாரிப்பு, விதைகள் சேகரிப்பு முறை, பருவநிலை மாற்றத்தை மரங்கள் அதிகரிப்பதன் மூலம் எவ்வாறு சரிசெய்வது மற்றும் உலகமே எதிர்கொள்ளும் எல்நினோ தாக்கத்தைப் பசுமையால் வெல்வது குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

கூட்டத்தில் மாணவ-மாணவியர் ஏராளமான விதை வகைகளைக் கொண்டுவருவதாகவும், தாங்கள் உண்ணும் பழ விதைகளைப் பல்கலைக்கழகத்திற்குச் சேகரித்து வழங்குவதாகவும் உறுதி அளித்தனர். தாமிரபரணி நீர்ப்பிடிப்புப் பகுதிகள், நெடுஞ்சாலை ஓரங்கள், குளக்கரைகள் மற்றும் மணிமுத்தாறு பகுதிகளில் இந்த விதைப்பந்துகளைத் தூவிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக டீன் ராஜகுமார் தெரிவித்தார். மேலும், இதுவரை சுமார் 62 லட்சம் விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டுத் தூவப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கு 'பசுமை பங்காளி' விருதுகள் தினேஷ் மற்றும் திருமாறன் ஆகியோரால் வழங்கப்பட்டன. இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைப் பசுமை ஜவகர் மற்றும் அம்பை காந்தி தாசர் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் விதைப்பந்து தூதுவர்களாக அண்ணா பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ-மாணவியரான காயத்ரி, நந்தினி, சலோமி, மகாலட்சுமி, முகமது அதில், விஷ்வா, கெவிகாஷ் ஆகியோர் முன்வந்தனர்.