செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபாயகரமான வளர்ச்சி காரணமாக இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் மனித சமுதாயமே அழியும் அபாயம் உள்ளதாக எச்சரித்து, முன்னணி AI ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவுத் துறையின் முன்னணி நிறுவனங்களான ஆந்த்ரோபிக் (Anthropic) மற்றும் ஓபன்ஏஐ (OpenAI) ஆகியவற்றில் கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றிய 27 வயதான முன்னணி ஆய்வாளர் ஜேக்கப் காக்சன், தனது பதவியை ராஜினாமா செய்து சமூக வலைத்தளத்தில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், AI நிறுவனங்கள் மனித உயிர்களுடன் ஆபத்தான சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தங்களைத்தாங்களே மேம்படுத்திக் கொள்ளும் 'சூப்பர் இன்டெலிஜென்ஸ்' (Superintelligence) அமைப்புகளை உருவாக்கும் போட்டியில் நிறுவனங்கள் பொறுப்பற்ற முறையில் இயங்கி வருகின்றன.

மனித ஆற்றலை மிஞ்சும் வகையில் உருவாகும் இந்த அமைப்புகள் எதையும் ஹேக் செய்யவும், ஒரே இரவில் துறைகளில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தவும், நிஜ உலக வளங்களைக் கைப்பற்றக்கூடிய ஆற்றலையும் பெறும் திறன் கொண்டவை. இந்த தசாப்தத்தின் (2030) இறுதிக்குள் இந்த தொழில்நுட்பம் மனித குலத்தையே அழித்துவிடும் என்று பல மூத்த ஆய்வாளர்கள் தனிப்பட்ட முறையில் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனங்களின் நிலைப்பாடு:

ஓபன்ஏஐ நிறுவனத்தில் இதன் நாகரிக ஆபத்துகள் குறித்து இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றும், ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் அபாயங்கள் தெரிந்திருந்தும் போட்டியில் பின்தங்கி விடுவோம் என்ற பயத்தால் ஆபத்தான வேகத்தில் செயல்பட்டு வருவதாகவும் காக்சன் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஆந்த்ரோபிக் நிறுவனமே தற்போது AI துறையில் முன்னணியில் இருப்பதாகத் தொழிலதிபர் எலான் மாஸ்க் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் பதில்:

காக்சனின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் அலைன்மென்ட் சயின்ஸ் பிரிவின் தலைவர் ஈவான் ஹூபிங்கர், காக்சன் கூறிய கருத்து உண்மையானதுதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

அடுத்த 10 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவால் மனித குலத்திற்கு ஆபத்து ஏற்பட 10 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சூப்பர் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சரியான பாதுகாப்புத் திட்டங்கள் இன்னும் முழுமையாக உருவாக்கப்படவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.