குளச்சல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பரப்பு மகாதேவர் கோவில் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் கடந்த நவம்பர் 22-ஆம் தேதி இரவு இச்சம்பவம் நடந்துள்ளது. ஆன்லைன் டேட்டிங் செயலி மற்றும் வாட்ஸ்அப் மூலம் புகார்தாரரைத் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர், அவரைச் சந்திப்பதற்காகத் தங்கும் விடுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு சென்ற புகார்தாரரைத் தனியறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு காத்திருந்த அந்த நபரின் நண்பர்கள் புகார்தாரரைத் தாக்கி, அவரது செல்போனைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கிலிருந்து யுபிஐ பரிவர்த்தனை மூலம் சுமார் ரூ. 58,000 பணத்தை எடுத்துள்ளனர். பணப் பரிவர்த்தனைக்கான ரகசியப் பின் எண்ணைத் தெரிவிக்க மறுத்தபோது மீண்டும் தாக்கி, மிரட்டிப் பின் எண்ணைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும், புகார்தாரர் அணிந்திருந்த சுமார் 9 சவரன் தங்கச் சங்கிலி, 2 சவரன் தங்க வளையல், தங்க மோதிரங்கள், செல்போன் மற்றும் ரூ. 600 ரொக்கம் ஆகியவற்றையும் பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்துக் குளச்சல் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் பிரிவு 310(2)-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நாகர் உத்தரவின் பேரில், தக்கலை துணைக் காவல் கண்காணிப்பாளர் காந்தி தலைமையில், குளச்சல் காவல் ஆய்வாளர் வெற்றிவேல் ராஜன் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

இதில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னமருது (29), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வேல்குமார் (18) மற்றும் ஓர் இளஞ்சிறார் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரைத் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

காவல்துறை எச்சரிக்கை

இதற்கிடையே, ஆன்லைன் டேட்டிங் செயலிகள் மூலம் அறிமுகமாகும் அடையாளம் தெரியாத நபர்களை நேரில் சந்திப்பதிலும், தனிமையான இடங்களுக்குச் செல்வதிலும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.