2027 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி தேர்வில் வயது ஒரு பொருட்டல்ல; வீரர்களின் உடற்தகுதியும் தற்போதைய செயல்திறனுமே அளவுகோலாக இருக்கும் என பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் தெரிவித்துள்ளார்.

2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இடம்பெறுவார்களா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவர் மிதுன் மன்ஹாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட போதிலும், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் விராட் கோலி 139 ரன்களும், கவுகாத்தியில் நடைபெற்ற 2-வது போட்டியில் ரோகித் சர்மா 101 ரன்களும் குவித்தனர். சண்டிகரில் நடந்த 3-வது போட்டியில் ரோகித் சர்மா 92 ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் 2027 அக்டோபர் 2 முதல் நவம்பர் 21 வரை நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையின் போது, விராட் கோலிக்கு 39 வயதும், ரோகித் சர்மாவுக்கு 40 வயதும் நிறைவடைந்திருக்கும்.

இதுகுறித்து பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் கூறுகையில், "2027 உலகக் கோப்பைக்கான அணித் தேர்வில் உடற்தகுதியும், திறமையுமே பிரதான அளவுகோலாக இருக்குமே தவிர நிச்சயமாக வயது ஒரு காரணமாக இருக்கக் கூடாது. தேர்வு என்பது முழுக்க முழுக்கத் தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர்கள் சார்ந்த விஷயம்" என்றார்.

மேலும் அவர் பேசுகையில், "விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா போன்ற மூத்த வீரர்கள் அணியில் இருப்பது, கேப்டன் சுப்மன் கில்லுக்குப் பொறுப்புகளைக் கையாள்வதற்கும் பணிச்சுமையைப் பகிர்ந்து கொள்வதற்கும் நிச்சயமாக உதவும். பந்துவீச்சில் பும்ரா போன்றவர்கள் வழிநடத்த உறுதுணையாக இருப்பார்கள்.

நெருக்கடியான சூழல்களை எதிர்கொண்டு பல முக்கிய வெற்றிகளைப் பெற்றுத் தந்த இவர்களின் அனுபவம், அணிக்குச் சிறந்த கலவையாக அமையும்" என்று தெரிவித்தார்.