கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் விஐபி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் யூடியூபர் மதுமிதா. இவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு இவர்களது வீட்டின் பின்பக்கக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் வைத்திருந்த 118 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.

இச் சம்பவம் குறித்துக் தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். "நாங்கள் மாதம் தோறும் தங்கம் வாங்குவோம்; நீங்களும் வாங்குங்கள்" என்று பெருமைப்பட்டு, தங்களிடம் உள்ள அனைத்து நகைகளையும் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்ததே இக் கொள்ளைச் சம்பவத்திற்கு முக்கிய வழிவகுத்துள்ளது எனத் தெரிகிறது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்களுக்குக் காவல் துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்கள்: சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக உங்களிடம் உள்ள தங்கம், பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைக் காட்டி வீடியோ பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் செல்வ வளத்தைச் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்துவது, திருடர்களுக்கு நீங்களே வழி காட்டுவதற்குச் சமம். பெருமைக்காக வீடியோ வெளியிடுவது, கொள்ளையர்களுக்கு உங்களுடைய வீட்டு முகவரியை நீங்களே கைப்படக் கொடுப்பதற்குச் சமமான ஆபத்தாகும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.