​திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் குடிநீர் பிரச்சனை தொடர்பாக, கோரிக்கை வைக்கச் சென்ற பொதுமக்களைத் துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியுள்ள செயல் கடும் கண்டனத்திற்குரியது என்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

​இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது "துறையூர் தொகுதியில் தண்ணீர் வரவில்லை எனத் துணை சபாநாயகரும் எம்.எல்.ஏ.-வுமான ரவிசங்கரிடம் அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர் முறையிட்டுள்ளார். கோரிக்கையைச் சொல்ல வந்த தொகுதிவாசியிடம், துணை சபாநாயகர் ரவிசங்கர் அடாவடித்தனமாகப் பேசி கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார்.

​தன்னைச் சந்திக்க வந்த கார்த்திக் குமாரைத் துணை சபாநாயகர் அடித்து விரட்டிய வீடியோ வெளியாகிப் பகிரங்கமாகியுள்ளது. “தளபதிக்காக வாக்களித்தேன்” என கார்த்திக் குமார் சொல்லச் சொல்லக் கோரமாகத் தாக்கியுள்ளார் ரவிசங்கர். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கார்த்திக் குமார், “ரவிசங்கர்தான் என்னைத் தாக்கினார்” என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

​

த.வெ.க ஆட்சியில் மேடைப் பேச்சுக்காக தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்படுகிறார்கள்; மேடைப் பேச்சுக்காக எங்கள் மாவட்டச் செயலாளர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து வருகிறது. விலைவாசி உயர்வு குறித்து பேட்டி கொடுக்கும் பொருளாதார அறிஞர்கள் கைது செய்யப்படுகின்றனர். சமீபத்தில்கூட தேர்தல் கால வழக்குக்காக நாம் தமிழர் கட்சி பெண் நிர்வாகி ஒருவரை அதிகாலையில் கைது செய்தது காவல்துறை.

இந்நிலையில், கோரிக்கை வைக்க வந்த நபரைத் தாக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது முதல்வர் விஜய் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?​ துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, கோரிக்கை வைக்கும் பொதுமக்களிடம் மக்கள் பிரதிநிதிகள் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ​இவ்வாறு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தனது கண்டன அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.