தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள மணிநகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துக்குமார் என்பவரின் ஒரே மகன் சூர்யபிரகாஷ் (21). இவர் நாசரேத் சந்தைப் பகுதியில் உள்ள ஒரு குளிர்பானக் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு வாழையடி பகுதியில் இருந்து நாசரேத் நோக்கி சூர்யபிரகாஷ் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் பலமாக மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சூர்யபிரகாஷ், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த நாசரேத் காவல் நிலையப் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சூர்யபிரகாஷின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகச் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மாரி செல்வத்தைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

