» சினிமா » செய்திகள்
மலைகிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த கே.பி.ஓய்., பாலா!
வெள்ளி 18, ஆகஸ்ட் 2023 12:45:43 PM (IST)
சின்னத்திரை காமெடி நடிகர் பாலா, தனது சொந்த செலவில் மலைகிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார்.
சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. 'கலக்கப்போவது யாரு' எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி வருகிறார். மேலும், சமூக சேவையும் செய்து வருகிறார்.
இந்நிலையில், நகைச்சுவை நடிகர் பாலா ஈரோடு மாவட்டம் குன்றி ஊராட்சி மலை கிராமத்திற்கு தன்னார்வ அமைப்பின் மூலம் இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கியுள்ளார். மருத்துவ அவசர காலங்களில் மிகவும் அவதிப்பட்டு வந்த இக்கிராம மக்களின் கோரிக்கைக்கு இணங்க தன்னார்வ அமைப்பினர் மூலம் ரூ. 10 லட்சம் செலவில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை நடிகர் பாலா, மாவட்ட எஸ்.பி, மாநகராட்சி மேயர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இது குறித்து நடிகர் பாலா பேசியதாவது, ஈரோடு மாவட்டம் குன்றியை சுற்றியுள்ள 12 கிராமங்களில், எட்டாயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு பாம்பு உள்ளிட்ட வன விலங்களால் பாதிப்பு ஏற்பட்டாலோ, உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டாலோ, சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல, 16 கி.மீட்டர் தொலைவில் இருந்து தான் ஆம்புலன்ஸ் வர வேண்டும்.
இதையறிந்ததும், இவர்களுக்கும் ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கி தர வேண்டும் என எண்ணினேன். இதற்காக யாரிடமும் பணம் வாங்காமல், என்னிடம் இருந்த பணத்தை சேர்த்து வைத்து இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கிக் கொடுத்துள்ளேன் என்று பேசினார்.