» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அங்கிரிஷ் ரகுவன்ஷி - சுனில் நரைன் அதிரடி : கொல்கத்தா ஹாட்ரிக் வெற்றி!

வியாழன் 4, ஏப்ரல் 2024 12:13:23 PM (IST)ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் டெல்லி அணியை 106 ரன்களில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.

விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணிக்காக சுனில் நரைன் - ஃபில் சால்ட் ஓப்பனர்களாக களமிறங்கினர். சுனில் நரைன் சிறப்பான தொடக்கத்தை கொடுக்க, 18 ரன்களில் அவுட்டானார் ஃபில். 

அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி - சுனில் நரைனுடன் இணைந்து விளாச 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களைச் சேர்த்தது கொல்கத்தா. ஐபிஎல் தொடரில் 10 ஓவரில் எடுக்கப்பட்ட 3வது அதிகபட்ச ஸ்கோர் இது. 7 சிக்சர்களை விளாசி 85 ரன்களை குவித்த சுனில் நரைனை 13ஆவது ஓவரில் மிட்செல் மார்ஷ் விக்கெட்டாக்கினார். அவரைத் தொடர்ந்து 54 ரன்களில் அங்கிரிஷ் ரகுவன்ஷியும் வெளியேறினார்.

ரிங்கு சிங் வந்த வேகத்தில் 3 சிக்சர்களை விளாசி 28 ரன்களுடன் நடையைக் கட்டினார். அடுத்த ஓவரில் ரஸல் 41 ரன்களில் போல்டானார் அதே ஓவரில் ரமன்தீப் சிங் 2 ரன்களுக்கு அவுட். தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி வந்த கொல்கத்தா இறுதிக்கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 272 ரன்களைச் சேர்த்தது.

273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை டெல்லி அணி விரட்டியது. டெல்லி அதிரடி தொடக்கம் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், முதல் 5 ஓவர்களில் பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், அபிஷேக் போரல், டேவிட் வார்னர் ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதில் மார்ஷ் மற்றும் போரல் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர். அதன் பிறகு கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் ட்ரிஸ்டியன் ஸ்டப்ஸ் இணைந்து 93 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

25 பந்துகளில் 55 ரன்கள் விளாசிய பந்த், வருண் சக்கரவர்த்தி சுழலில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் அக்சர் படேலை வெளியேற்றினார் வருண். ஸ்டப்ஸ், 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்த டெல்லி அணி, 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் மூலம் கொல்கத்தா வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணிக்காக வைபவ் அரோரா மற்றும் வருண் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். ஸ்டார்க் 2, ரஸல் மற்றும் நரைன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை சுனில் நரைன் வென்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory