» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொங்கல் பண்டிகையொட்டி ரூ.725.56 கோடிக்கு மது விற்பனை: திருச்சி மாவட்டம் முதலிடம்!
சனி 18, ஜனவரி 2025 11:12:41 AM (IST)
தமிழகத்தில் பொங்கல் விடுமுறை நாள்களில் ரூ.725.56 கோடிக்கு மது விற்பனையானது. இதில், ரூ. 179 கோடி விற்பனையுடன் திருச்சி முதலிடம் பிடித்துள்ளது.
பொங்கல் திருநாளையொட்டி, தமிழகத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால், மது விற்பனை சூடு பிடித்தது. இதுகுறித்து மாநில வாணிபக் குழு (டாஸ்மாக்) தெரிவித்ததாவது, தமிழ்நாடு முழுவதும் உள்ள மது விற்பனை நிலையங்களில் ஜனவரி 13 முதல் 16 வரையிலான பொங்கல் விடுமுறை நாள்களில் ரூ.725.56 கோடி மதிப்பில் மதுபானங்கள் விற்கப்பட்டன.
கடந்தாண்டு பொங்கல் நாள்களில் ரூ. 678.65 கோடிக்கு விற்கப்பட்ட நிலையில், இந்தாண்டில் ரூ. 46 கோடி அதிகமாக விற்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சராசரியாக தினசரி விற்பனை சுமார் ரூ. 145 கோடியாகவும், 3 நாள்களில் மட்டும் தினசரி விற்பனையில் 67 சதவிகிதம் உயர்ந்து ரூ. 241.85 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டன.
போகிப் பண்டிகையான ஜனவரி 13 ஆம் தேதியில் ரூ. 185.65 கோடிக்கும், பொங்கல் பண்டிகையான ஜனவரி 14 ஆம் தேதியில் ரூ. 268.46 கோடிக்கும், ஜனவரி 15-ல் திருவள்ளுவர் தினத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, காணும் பொங்கல் பண்டிகையான வியாழக்கிழமையில் ரூ. 271 கோடிக்கும் மதுபானங்கள் விற்கப்பட்டன.
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான ஜனவரி 13 ஆம் தேதியில் இருந்து 4 லட்சம் அட்டைப்பெட்டிகள் பீர் வகைகளும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டுவகை மதுபானங்கள் 8.5 லட்சம் அட்டைப்பெட்டிகளும் விற்கப்பட்டுள்ளன.
ஆனால், மது விற்பனையில் எப்போதும் முதலிடத்தைப் பிடிக்கும் மதுரை, இந்தாண்டில் தவற விட்டுவிட்டது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ. 149.55 கோடி மட்டுமே விற்பனையாகியுள்ளன. பொங்கல் பண்டிகை மது விற்பனையில் ரூ. 179 கோடி விற்பனையுடன் திருச்சி மாவட்டம் முதலிடத்திலும், சேலம் மாவட்டம் ரூ. 151.50 கோடி விற்பனையுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ. 142 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.