» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுனை போட்டி: திமுக - நாம் தமிழர் கட்சி நேரடி மோதல்

வெள்ளி 17, ஜனவரி 2025 5:20:31 PM (IST)

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், திமுக - நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு கடந்த 10-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாளான இன்று திமுகவின் வி.சி.சந்திரகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து களம் இறங்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

இவர்களுடன் மேலும் சில சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஆளும் கட்சியான திமுக இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளரை நேரடியாக களம் இறக்கி உள்ளது. திமுக தொண்டர்களை பொறுத்தவரை கட்சியின் இந்த முடிவு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி கடந்த 2021-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

2026-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் இந்த தொகுதியை காங்கிரசிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் திமுகவினர் தீவிரமாக இருந்தனர். அதற்கு இந்த இடைத்தேர்தலில் வேட்பாளர் மாற்றம் தி.மு.க.வினருக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது.

ஆளும் திமுக வேட்பாளரை அறிவித்த நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக போட்டியில் இருந்து விலகி இருப்பது அதிமுக அடிமட்ட தொண்டர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்சி தலைமையின் முடிவு என ஏற்றுக்கொண்டாலும், வரும் பொதுத்தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற முழு மூச்சில் போராடும். அதிமுகவை தொடர்ந்து தேமுதிகவும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது.

இதுபோல் பாஜக கூட்டணியும் தேர்தலை புறக்கணித்து உள்ளது. இந்த கூட்டணியில் உள்ள த.மா.கா. கடந்த பொதுத்தேர்தலில் முக்கிய கட்சியாக போட்டியிட்டு 2-ம் இடத்தை பிடித்தது. கடந்த 2023-ம் ஆண்டு இடைத்தேர்தலில் தொகுதியை தங்கள் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்தது. இந்த முறை போட்டியில் இருந்தே விலகி உள்ளது. பாஜக கூட்டணியின் இந்த முடிவு அரசியல் பார்வையாளர்களால் ஏற்கனவே கணிக்கப்பட்டதாக இருந்ததால் இந்த முடிவு வாக்காளர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கவில்லை.

முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளரை அறிவித்தது. இதனால் திமுகவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சி என்கிற இடத்தை நாம் தமிழர் கட்சி பிடித்துள்ளது. இது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதுவரை நடந்த தேர்தல்களில் கணிசமாக வாக்கு பெற்றாலும் 3-வது அல்லது 4-வது இடம் என்ற நிலை, இந்த இடைத்தேர்தலில் 2-வது இடம் என்ற அளவுக்கு மாறும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, நாம் தமிழர் கட்சிக்கு திமுக எதிர்ப்பு வாக்குகள், அதிமுக, பாஜக கூட்டணி வாக்குகள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் தேர்தல் முடிவை மாற்றும் வாய்ப்பும் உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory