» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை
வெள்ளி 17, ஜனவரி 2025 12:06:47 PM (IST)
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.