» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இந்திய அளவில் காற்றின் தரத்தில் நெல்லை முதலிடம்: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!
வெள்ளி 17, ஜனவரி 2025 5:53:12 PM (IST)
தரமான காற்று கிடைக்கும் இந்திய நகரங்களில் திருநெல்வேலி முதல் இடத்தையும், அருணாச்சல பிரதேசத்தின் நாகர் லகுன் 2-வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்திய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட காற்று தர குறியீடு ஆய்வில் மாசுபடாத காற்றை கொண்ட நகரங்களில் திருநெல்வேலிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதற்கான விவரங்களை வெளியிட்டுள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கான சமீபத்திய காற்றுத் தரக் குறியீட்டு (AQI) தரவை கடந்த 9-ம் தேதி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை, வாகனங்களின் பெருக்கம் மற்றும் மனித செயல்பாடுகள் காரணமாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.
நாட்டிலுள்ள நகரங்களில் காற்றின் தரம், அதில் கலந்துள்ள மாசுக்கள் குறித்த ஆய்வை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அவ்வப்போது மேற்கொண்டு, அது தொடர்பான தரவுகளை வெளியிட்டு வருகிறது. நாட்டில் பல்வேறு நகரங்களில் காற்றின் தரம் ஒரு முக்கியமான சுற்றுச்சூழல் சவாலாக இருப்பதை அந்த புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அந்தவகையில் நாட்டிலுள்ள பல்வேறு நகங்களில் சுத்தமான காற்று மற்றும் சிறந்த காற்றுத் தரக் குறியீடு உள்ள இந்தியாவின் முதல் 10 நகரங்களை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பட்டியலிட்டு, அந்த நகரங்களுக்கான சமீபத்திய காற்றுத் தரக் குறியீட்டு அளவையும் கடந்த 9-ம் தேதி வெளியிட்டுள்ளது.
அந்த அளவுகளின்படி நாட்டிலுள்ள நகரங்களில் மிகச்சிறந்த காற்றின் தரம் இருக்கும் நகரமாக திருநெல்வேலி திகழ்கிறது. தமிழகத்தின் திருநெல்வேலி முதல் இடத்தையும், அருணாச்சல பிரதேசத்தின் நாகர் லகுன் 2-வது இடத்தையும், கர்நாடகாவின் மடிக்கேரி 3-வது இடத்தையும், விஜயபுரா 4-வது இடத்தையும், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் 5-வது இடத்தையும் பிடித்துள்ளன.
டெல்லியில் மிகவும் மோசம்: காற்றின் தரம் மிகவும் மோசமாக இருக்கும் நகரங்கள் பட்டியலில் முதல் இடத்தை இந்திய தலைநகரான புதுடெல்லி பிடித்துள்ளது. மோசமான காற்று தரம் உள்ள 2-வது இடமாக உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தும், 3-வது இடத்தை மேகாலயாவின் பிரின்ஹேட் நகரமும் பிடித்துள்ளன. சண்டிகர், உத்தரபிரதேசம், ஜார்க்கன்ட், ஹிமாச்சலபிரதேசம், மகாராஷ்டிரா ஆகியவை காற்றின் தரம் மோசமாக உள்ள முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.