» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா? - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

வெள்ளி 25, அக்டோபர் 2024 5:14:18 PM (IST)

சென்னையில் நடந்த அரசு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு அரசின் புத்தாய்வுத் திட்டப் பயிற்சியை நிறைவு செய்தோருக்கான சான்றிதழ்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (அக்.25) வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அங்கிருந்த அரசு ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடினர். அப்போது கண்டமிதில் என்பதை கண்டமதில் என்றும், புகழ் மணக்க என்பதை 'திகழ்' மணக்க என்றும் பாடினர். மேலும் மைக் சரியாக வேலை செய்யாததால் , திராவிட நல் திருநாடும் என்ற வரியில் ' திருநாடும் ...' என்ற வார்த்தை ஒலிபெருக்கியில் ஒலிப்பதில் இடைவெளி ஏற்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பிழையுடனும், தடுமாற்றத்துடனும் அரசு ஊழியர்கள் பாடியதைக் கண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது அருகில் அமர்ந்திருந்த சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமதுவிடம் நிகழ்ச்சியின் நிறைவில் பிழையின்றி ஒருமுறை தமிழ்த்தாய் வாழ்த்தை பாடச் செல்லுமாறு கூறினார் . துணை முதல்வர் அறிவுறுத்தல்படி இரண்டாம் முறை தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய அரசு ஊழியர் குழுவினர் மீண்டும் அதே பிழையுடன் பாடினர். இம்முறை மைக் சரியாக வேலை செய்ததால், பிழைகள் அனைத்தும் தெளிவாகத் தெரிந்தன.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "தமிழக அரசின் புத்தாய்வுத் திட்டப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட 30 பேரில் 19 பேர் நிறைவு செய்து இன்று சான்றிதழ் பெற்றுள்ளனர். இத்திட்டத்தை, பாரதிதாசன் மேலாண்மை கல்லூரியுடன் இணைந்து ஆண்டுக்கு 6.5 கோடியில் செயல்படுத்தி வருகிறோம். அடுத்த 2 ஆண்டுக்கு இப்பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படும்.” என்றார்.

அப்போது அவரிடம், தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை. அது ஒரு தொழில்நுட்பக் கோளாறுதான். மைக் சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு மூன்று இடங்களில், பாடியவர்களின் குரல் கேட்கவில்லை. எனவே, ஆரம்பத்தில் இருந்து மீண்டும் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதன்பின்னர், தேசிய கீதமும் முறையாக பாடப்பட்டது. தேவையில்லாமல் மீண்டும் பிரச்சினையை கிளப்பிவிட வேண்டாம்.” என்று அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory